திருப்பூர், ஆக.31:சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.23.85 லட்சம் நிதியினை 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் வழங்கினர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் அருள்குமார் (35). இவர், கடந்த 2009ம் ஆண்டில் காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார். இவர் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த ஜனவரி மாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதனால், இவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் பெற்றோர் வருமானமின்றி தவித்து வந்தனர்.இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 2009ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த போலீசார் ஒன்றிணைந்து ரூ.23.85 லட்சம் நிதிதிரட்டினர். தொடர்ந்து ஊத்துக்குளியில் வைத்து அருள்குமார் குடும்பத்திற்கு ரூ.23.85 லட்சம் நிதியை வழங்கினர். காவல் நண்பர்களின் உதவியை பெற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுத கட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் இதுவரை 28 காவலர் குடும்பங்களுக்கு நிதி அளித்து உள்ளனர்.