குடியாத்தம், ஆக.19: குடியாத்தம் அருகே பைக் விபத்தில் சிக்கிய செக்யூரிட்டியின் 2 சவரன் செயின் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜீவரத்தினம்(47). இவர் குடியாத்தம் அடுத்த லிங்ககுன்றம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி ஜீவரத்தினம் தனது பைக்கில் கார்த்திகேயபுரம் பகுதிக்கு சென்றார். அப்போது, செல்லும் வழியில் நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்துள்ளது. இதில், ஜீவரத்தினம் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஜீவரத்தினம் சிகிச்சை பெற்று கண்விழித்து பார்த்தபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயின் காணாமல்போனது தெரியவந்தது. விபத்தில் படுகாயம் அடைந்து ஜீவரத்தினம் மயங்கிய நிலையில் இருந்தபோது யாரோ மர்ம ஆசாமிகள் அவரது செயினை திருடி சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ஜீவரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.