வேலூர், ஜூன் 10: காட்பாடி அருகே கடந்த 2017ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.21.75 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. காட்பாடி அடுத்த திருவலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையன்(57). சர்க்கரை ஆலையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவலம் அருகே இயற்கை உபாதையை கழிப்பதற்காக நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி செல்லையன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டவருக்கு தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் கணவர் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் உரிமை தீர்ப்பாயத்தில், செல்லையனின் மனைவி மின்னலா மற்றும் அவரது குழந்தைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், மனுதாரர் கணவர் உயிரிழப்புக்கு லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது உறுதியானது. எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக ரூ.21.75 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.21.75 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் தீர்ப்பு காட்பாடி அருகே கடந்த 2017ம் ஆண்டு
0