பரமக்குடி,ஆக.14: பரமக்குடி அரசு கல்லூரிக்கு வந்த இரண்டு மாணவிகள் மீது மோதிய கார், ஐடிஐ காம்பவுண்ட் சுவரை உடைத்து நின்றது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரி ராமநாதபுரம் நெடுஞ்சாலையின் உள்ளது. மாணவ,மாணவிகள் சாலையை கடக்கும் போது அதிவேகமாக வரும் கார், லாரி மற்றும் பேருந்துகளால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகள் பிரியங்கா சோப்ரா(21), சியாமளா தேவி(20) ஆகியோர் சாலை ஓரத்தில் கல்லூரிக்கு நடந்து சென்றனர்.
அப்போது, அதிவேகமாக எதிரே வந்த கார் மாணவிகள் மீது மோதி விட்டு அருகேயுள்ள ஐடிஐ தடுப்புச்சுவரை உடைத்து நின்றது. இதில் பலத்த காயமடைந்த பிரியங்கா சோப்ரா, சியாமளா தேவி பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரமக்குடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து கார் ஒட்டிய அரியனந்தலை சேர்ந்த பிரவீன்(21) என்பவரை கைது செய்தனர்.
மாணவர்கள் சாலை யை கடக்கும் போது விபத்துக்கள் நடைபெறுவதால், அங்கு பேரிக்காட் அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும். காலை,மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களை நியமித்து வேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.