Thursday, June 8, 2023
Home » வினைகளெல்லாம் தீர்ப்பார் வியாக்ரபுரீஸ்வரர்

வினைகளெல்லாம் தீர்ப்பார் வியாக்ரபுரீஸ்வரர்

by kannappan

திருப்பெரும்புலியூர், தஞ்சைசிதம்பரத்தில் தில்லைக் கூத்தனான நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருந்தான். அவனின் செம்பாதங்களை சதாகாலமும் பூஜிக்க வேண்டுமென்ற பேரவா மத்யாயனர் எனும் பக்தரின் உள்ளத்தில் எழுந்தது. பூஜிப்பதற்கு அன்றலர்ந்த, பனி மேவிய பூக்களல்லவா வேண்டும்? மலர்ந்து ஒரு சில மணிநேரமானாலும் அது வாடத் துவங்கும் கட்டத்துக்கு வரக் கூடியதுதானே! அந்தப் பூக்களால் பூஜிப்பது மகாபாவமாயிற்றே என்று எண்ணினார். தேன்சிந்தும் மலர்களால் அலங்கரித்து அழகு பார்க்க வேண்டியவனை வெற்றுப் பூக்களால் அர்ச்சிப்பது முறையாகாது என்று நினைத்தார். புத்தியில் சட்டென்று பிரகாசமாக யோசனை ஒளிர்ந்தது. மலரும்போதே பூக்களைப் பறித்து பெருமானுக்கு மாலையாக்கிப் போடலாமே என்று புதுமையாக சிந்தித்தார். இரவில் மலரும் பூக்களைப் பறிக்க, கூர்மையான கண்களும், வேகமும், தாவிச் செல்லும் கால்களும், கரங்களுமாகத் தனக்கு  ஓர் பிறவி வேண்டுமே என்று ஏக்கம் கொண்டார்.  கண்ணீருடன் தில்லை நாயகனைத் துதித்தார். இறைவன் உடனே அருளினான். வியாக்ர பாதர் ஆனார். வியாக்ரம் என்றால் புலி. புலிக்காலுடையவரானார்.இரு கரங்களிலும், கால்களிலும் வலுவேறியது. முகம் குறுகி புலியுருக் கொண்டது. கண்கள் அதிகூர்மையாகின. சக்தியின் திரட்சி உள்ளுக்குள் வேகமாகப் பொங்கியது. ‘என் மனம் புரிந்து இவ்வுரு அளித்திருக்கிறாயே எம்பெருமானே…’ என்று மகிழ்ந்து, முன்கால்களை நீட்டி, பிடரியையும் முதுகையும் நேர்க் கோட்டில் கிடத்தி, பின்கால்களை வளைத்து நமஸ்கரித்து நன்றி சொன்னார். பிறகு, பெரும்புலியூர் எனும் காவிரி பாயும் தலம் நோக்கிச் சென்றார்.வியாக்ரபாதர் அத்தலத்தை அடைந்து, பரவசமிக்கவராக லிங்க ரூபத்தில் எழுந்தருளியிருந்த ஈசன் அடியில் வீழ்ந்து துதித்தார். அந்தி நெருங்கியது; மலர்களின் வாசம் வியாக்ரபாதரை ஈர்த்தது. கூடை கூடையாக பூக்களைப் பறித்து அதிகாலையிலேயே அர்ச்சித்தார். தேவர்களும், வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் பெற்ற பெரும்பேறால் இத்தலம் இன்றளவும் திருப்பெரும்புலியூர் என்றழைக்கப்படுகிறது.திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மீது பதிகங்கள் பாடியுள்ளார். அவை ஒவ்வொன்றையும் தம்மீது ஆணை என்பது போன்ற பாவனையில் பாடியிருப்பதுதான் சிறப்பு.கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம். கோபுரத்தின் மீதுள்ள சிற்பங்கள் பழமையானவை. கீழ்ப்பகுதி கருங்கற்களாலும், மேற்புறம் சுதையாலும் ஆனவை. கோபுர வாயிலிலிருந்து நேரே பார்க்க, மூலவர் தண்ணிலவாக பிரகாசிக்கிறார். கோயிலுக்குள் நுழையும்போதே சிவ சாந்நித்யம் மனதை நிறைவிக்கிறது. தறிகெட்டு ஓடும் மனக் குதிரையை கடிவாளம் இருக்குவதுபோல் ஒரு உணர்வு தன்னிச்சையாக நடைபெறுகிறது. வியாக்ரபாதர் பூஜித்த லிங்கம், காலங்கள் கரைந்தாலும் அருட்கொடையில் அள்ள அள்ள குறையாத  அட்சய பாத்திரம் போல துலங்குகிறது. இதை அனுபவபூர்வமாக உணர்ந்துதான் தேவாரப்பதிகங்களில் ‘‘பெரும்புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’’ என்று பாடி நெகிழ்ந்திருக்கிறார்கள். சம்பந்தர் ‘‘மண்ணுமோர் பாகமுடையார்’’ எனும் பதிகத்தில் ஈசனின் சகல உயர்நிலைகளையும் காட்டி, இந்தப் பெரும்புலியூரானைப் பிரியாதவர்கள் சிவத்திற்கு சமமாவார் என்கிறார். அதுமட்டுமல்லாது இந்தப் பெரும்புலியூர் பெருமானை வழிபடுவோர் ‘‘தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சினராய் நீடுலகத்திருப்பாரே’’ என்று நம்பிக்கையோடு ஆசி கூறுகிறார். சகல ஞானிகளும் வீழ்ந்து பரவித் துதித்த பெரும்புலியூர்நாதரை பணிந்தால் அவர் பெருவாழ்வு தந்தருள்வார் என்பது திண்ணம்.வியாக்ரபுரீஸ்வரரின் சந்நதியில் மூழ்கியெழுந்து அம்பாளின் சந்நதி நோக்கிச் செல்வோம். நின்ற கோலத்தில் அழகிய வடிவம். மெல்லிய புன்னகை பேரின்பம் பெருக்கும் தேவி இவள். ‘வேண்டுவன கேள் தருகிறேன்’ என்பது போல அபயஹஸ்தமும், இடக்கரத்தை சற்றே மடித்திருக்கும் கோலமும் ஆனந்தம் தருகின்றன. மாயை எனும் கடலில் வீழ்வோரை நேசக்கரம் கொண்டு தூக்குவாள் அன்னை. ஞானத்தைத் தந்து பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவிப்பாள். வேறெங்கும் காணமுடியாத ஒரு அற்புதமாக வெளிப்பிராகாரத்திலுள்ள கருவறை பீடம், தாமரையின் மீது அமைந்திருக்கிறது. சிற்ப நுட்பங்கள் வாய்ந்த அந்த கமலபீடம் பார்ப்பதற்கு அரிதானது, அழகானது. தாமரையின் மீது அமைந்துள்ள இந்த பீடம், மகாலட்சுமியை நினைவுபடுத்துகிறது. அருவமாக லட்சுமி தேவியார் இங்கு அமர்ந்து பூஜிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது மட்டுமல்லாது குண்டலினி எனும் யோக சக்தியானது ஸஹஸ்ராரம் எனும் ஆயிரம் தாமரை இதழ்களாக விரிவடைவதுபோல், இத்தலத்தை தரிசிப்போர் யோகசக்தியில் சிறந்து விளங்குவர் என்கிறார்கள். ஏனெனில், வியாக்ரபாதரோடு எப்போதும் உடனிருக்கும் பதஞ்சலி முனிவர் யோகத்திற்கே அதிபதியாவார். அதுபோல வியாக்ரபாதரும், பதஞ்சலியும் இரட்டையர்கள் போல விளங்கினார்கள் என்பது வரலாறு. வியாக்ரபாதரோடு அவரும் இங்கு அமர்ந்து யோகத்தை போதித்திருக்கலாம் என்றும் அந்தச் சக்தியை இங்கு பதித்திருக்கலாம் என்றும் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக மலர்ந்திருக்கும்  இந்த தாமரை பீடத்தையும், அதன் மேல் எழுப்பப்பட்டிருக்கும் கருவறை விமானத்தையும் காட்டுகிறார்கள். பிராகாரத்தில் சூரியன், விநாயகர் சந்நதிகள் உள்ளன. சுப்ரமணியர் சந்நதி அழகுற அமைந்துள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பெருமை பெற்றது. மேலும் கோயிலை நாடறியச் செய்த மகான் சுந்தரசுவாமிகளின் திருவுருவச் சிலை உள்ளது. இக்கோயிலின் இன்னொரு சிறப்பு என்னவெனில் நவகிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறு அமைந்திருப்பதுதான். இதுவொரு அரிதான காட்சி. கருவறை கோஷ்டமூர்த்தங்களாக தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அர்த்தநாரீஸ்வரரும், வடக்கே சண்டேசரும் அமர்ந்திருக்கிறார்கள்.இத்தனை பெருமைகள் பெற்ற இத்தலம் பெரும்பான்மையான மக்களால் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயம். மீண்டும், ‘‘பெரும்புலியூரானைப் பேசாநாளெல்லாம் பிறவா நாளே’’ என்கிற பதிகவரிகள்தான் நினைவுக்கு வருகிறது.  தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பெரும்புலியூர். – ஆர். அபிநயா

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi