கிருஷ்ணகிரி, செப்.2: சதுர்த்தி விழாவையொட்டி, பர்கூர் பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென டிஎஸ்பி அறிவுறுத்தினார். பர்கூரில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பர்கூர் மற்றும் கந்திக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது- பாதுகாப்பது மற்றும் சிலைகள் கரைக்கும் நாளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து காவல்துறை சார்பில் நேற்று சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமை வகித்து, பேசுகையில், ‘களி மண்ணால் ஆன சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். சிலை வைப்பவர்களே பாதுகாப்பு கமிட்டி அமைத்து சிலைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் வகையில் உள்ள பொருட்களை சிலைக்கு அருகே வைக்க கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. சிலை வைத்துள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது,’ என்றார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.