சிங்கம்புணரி, மே 24: சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் உடனான பூரணை, புஷ்கலை தேவியர், கோயிலில் வைகாசி விசாக திருவிழா வரும் ஜூன் 1ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து சந்திவீரன் கூடத்திற்கு விநாயகர் செல்லும் விழா நடைபெற்றது. இதில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் விநாயகர் வைக்கப்பட்டு கீழக்காடு ரோடு வழியாக சந்திவீரன் கூடத்திற்கு விநாயகர் செல்லும் நிகழ்ச்சியில் வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் வைத்து விநாயகரை வழிபாடு செய்தனர். தொடர்ந்து பத்து நாட்கள் சந்திவீரன் கூடத்தில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூன்1ம் தேதி காலை சந்திவீரன் கூடத்திலிருந்து சேவுகப் பெருமாள் கோயிலுக்கு விநாயகர் மீண்டும் கொண்டுவரப்பட்டு கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா தொடங்க உள்ளது.