16 ரக மிளகாய்.. மேல் நோக்கி காய்க்கும்… கருப்பு புல்லட் மிளகாய் நெய் வாசம் வரும் மிளகாய்…பாரம்பரிய வெள்ளாமையில் அந்தந்த பிரதேசத்திற்கு ஏற்றது போல் தான் காய்கறி, கீரைகள், கிழங்கு வகைகள் எல்லாம் விளையும். அந்த பகுதியின் சீதோஷ்ண நிலை, நீரின் தன்மை உள்ளிட்டவற்றை பொருத்து அதில் உள்ள சத்துகளில் மாற்றம் ஏற்படும். ஆனால் இப்போது கத்திரி என்றால் இதுதான், வெண்டை என்றால் இப்படிதான் என ஒரு குறிப்பிட்ட ரகத்தை காண்பிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எங்கு பார்த்தாலும் வீரிய ரகம்தான். ஒரு காய்கறி கடைக்கு போனால் சுமார் 20 ரக காய்கறிதான் இருக்கும். ஆனால் நம் மண்ணில் நூற்றுக்கணக்கான காய்கறிகள் விளைந்திருக்கிறது. வெண்டை என்றால் அதிலேயே பல நூறு ரகம் இருந்திருக்கிறது. கத்திரிக்காய், சுரை என எல்லாமே அப்படித்தான்.” என்று ஆதங்கத்துடன் பேசுகிறார் ‘உழுது உண்’ அமைப்பை நடத்தும் சுந்தர். புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். 29 வயது இளைஞரான இவர் விஸ்காம் படித்திருக்கிறார். ஆனால் படித்த படிப்புக்கும், இவரின் செயல்பாட்டிற்கும் துளியும் சம்பந்தமில்லை. புதுச்சேரி, தமிழகம் என பல பகுதிகளில் சுற்றி அங்கு விளையும் பாரம்பரிய காய்கறிகளின் விதைகளை சேகரித்து வருகிறார். அவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்து, பாரம்பரிய விதைகளை பரவலாக்கமும் செய்து வருகிறார். பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடத்தில் பாரம்பரிய காய்கறிகளின் மகத்துவம், அவற்றை சேமிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்குகிறார். நாம் அவரை சந்தித்தபோது, விஸ்காம் படித்தது, பாரம்பரிய விதைகளை சேகரிக்க வந்தது என பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். “புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள சமுதாய கல்லூரியில் விஸ்காம் படித்தபோது இயற்கை விவசாயம் குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டியிருந்தது. அப்போது நம்மாழ்வார், நெல் ஜெயராமன் குறித்து அறிந்தேன். அப்போது நம்மாழ்வார் உயிருடன் இல்லை. நெல் ஜெயராமனை சந்தித்தேன். அவர் மூலம் ஒரு புதிய உலகத்தை காண முடிந்தது. நமது பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து அவ்வளவு விஷயங்களை அள்ளிக்கொட்டினார். அதில் இருந்து பாரம்பரிய நெல் ரகம், இயற்கை விவசாயம் குறித்து வியந்தேன். அறிந்துகொள்ள மேலும் ஆவலானது. அப்போது புதுச்சேரியிலேயே இருளன்சந்தை என்ற ஊரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வந்தார்.தினமும் அவரது வயலுக்கு சென்றுவிடுவேன். அதிகாலையில் சைக்கிளை எடுத்தால் மாலையில்தான் வீடு திரும்புவேன். வயலுக்கு சேடை ஓட்டுவது, நெல் விதைப்பது, பஞ்சகவ்யம், மீன் அமிலம் தயாரிப்பது என பல விஷயங்களை அவரிடம் இருந்து தெரிந்துகொண்டேன். பின்னர் நெல் ரகங்களை தேடி ஊர், ஊராக சுற்ற ஆரம்பித்தேன். திருச்சியில் பாமயனை சந்தித்தேன். அவர் மூலம் நமது இயற்கை விவசாய மரபு குறித்து மேலும் தெளிவடைந்தேன்.பாரம்பரிய நெல் ரகங்கள் கூட இப்போது பல நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் பாரம்பரிய காய்கறி விதைகள் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. அதனால் காய்கறி விதைகளை தேட ஆரம்பித்தேன். இதற்காக உழுது உண் என்ற தலைப்பில் முகநூல் குழுவை தொடங்கினேன். அதில் ஏராளமானோர் இணைந்தார்கள். அவர்களிடம் இருந்த காய்கறி ரகங்கள், தேவைப்படும் காய்கறி ரகங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்கள். இதன்மூலம் ஒரு நெட்வொர்க் உருவானது. இப்போது நாங்கள் 9 பேர் சேர்ந்து பாரம்பரிய விதை சேகரிப்போர் கூட்டமைப்பை தொடங்கியிருக்கிறோம். இதில் மேலும் பலர் இணைந்து வருகிறார்கள். எனக்கு அதிகளவில் நிலம் இல்லை. வீட்டை ஒட்டி 3 சென்ட் இடம் இருக்கிறது. இதில் சுமார் 60 ரக காய்கறி, கீரை, கிழங்குகளை பயிர் செய்கிறேன். வெண்டையில் 6 ரகங்கள் உள்ளது. இதில் சிவப்பு, சிவப்பு உருட்டு என 2 ரகங்களை பயிர் செய்கிறேன். கத்திரியில் மொத்தம் 130 ரகங்களை சேகரித்து வைத்திருக்கிறேன். இதில் ஒவ்வொன்றும் ஒரு ரகம். தொப்பி கத்திரி என ஒரு ரகம் இருக்கிறது. இது வானத்தை நோக்கி காய்க்கும். பாகற்காய் போல் கசக்கும். அப்படியே சாப்பிட முடியாது. சுண்டைக்காய் போல வத்தல் போட்டு பயன்படுத்தலாம். குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும். ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த ரகம் நம்மூர் ரகமாகவும் மாறிவிட்டது. இதை கர்நாடகாவில் உள்ள பழங்குடியினர் பயன்படுத்தி வருகிறார்கள். காந்தாரி என ஒரு வகை இருக்கிறது. இதில் சந்தன காந்தாரி, பச்சை காந்தாரி என 2 ரகம் இருக்கிறது. கேரளா மற்றும் திண்டுக்கல் மலையடிவாரத்தில் காய்க்கும். 5 முதல் 7 ஆண்டுகள் வரை காய்க்கும் திறனுடையது. கத்திரியில் இலவம்பாடி, கடலூர் பஞ்சங்குப்பம், புதுச்சேரி நாட்டு கத்திரி என 3 வகைகளை தோட்டத்தில் வைத்திருக்கிறேன். மிளகாயில் 16 ரகம் வைத்திருக்கிறேன். இதில் கருப்பு புல்லட் ரகம் மேல் நோக்கி காய்க்கும். நெய் மிளகாய் என்று ஒரு ரகம் இருக்கிறது. இதை சமைக்கும்போது நெய்வாசம் வரும். கீரைகளில் மாயன் கீரை என்ற ரகத்தை பயிரிட்டிருக்கிறேன். இது மாயன் பழங்குடிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். வெறும் வாயில் சாப்பிட்டால் ஸ்லோ பாய்சன் ஆகிவிடும். அதை வேகவைத்து சில பொருட்கள் கலந்துதான் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு அருமருந்தாக இருக்கும். சுரைகளில் பல ரகம் இருக்கிறது. சுரையை சாப்பிட பயன்படுத்தியதை விட தண்ணீர் ஊற்றி வைக்க, சித்த மருந்துகளை சேகரித்து வைக்க என பல விஷயங்களுக்கு நம் முன்னோர் பயன்படுத்தியிருக்கிறார்கள். பதனீர் சுரை என்று ஒரு ரகமிருக்கிறது. பனைமரங்களில் ஏறி பதனீர் மற்றும் கள் இறக்க இதை பயன்படுத்துவார்கள். சுரை குடுக்குக்கு ஒரு தன்மை இருக்கிறது. இது வெளியில் உள்ள வெப்பத்தை உள்ளே விடாது. இதனால் தண்ணீர், கள், சித்த மருந்துகள் உள்ளிட்டவற்றின் தன்மை அப்படியே இருக்கும். பேய்ச்சுரை என்ற சுரை கசப்பு மிகுந்தது. இதன் குடுவையில்தான் சித்த மருந்துகளை வைத்திருப்பார்கள். எவ்வளவு காலமானாலும் கெடாது. மகுடி சுரை என்று ஒன்று இருக்கிறது. பாம்பு பிடிப்பவர்கள் மகுடி செய்ய இதை பயன்படுத்துவார்கள். இதுவும் கசப்பு சுவை மிகுந்தது. இவை இரண்டுக்கும் இப்போது பயன்பாடு இல்லாததால் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இதனால் இவற்றை நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறோம். நீச்சல் சுரை, பானை சுரை, சிட்டு சுரை என்ற ரகங்களும் எங்களிடம் இருக்கிறது. நீச்சர் சுரையின் குடுவை 5 முதல் 10 லிட்டர் வரை தண்ணீர் பிடிக்கும். இந்த சுரைக் குடுவையை குழந்தைகளின் வயிற்றில் கட்டி, நீர்நிலைகளில் விட்டு விடுவார்கள். சுரை மிதக்கும். குழந்தைகள் நீச்சல் பழகுவார்கள். பானை சுரை பெரியதாக இருக்கும். இதில் விதைகளை சேமித்து வைக்கிறோம். சுரைக்காய் பெரிய அளவில் இருப்பதால் அப்போதிருந்த கூட்டுக்குடும்பங்களுக்கு இது நல்ல உணவாக இருந்தது. ஒரு சுரையை குடும்பமே சாப்பிடும். இப்போது குடும்பங்கள் எல்லாம் தனிக்குடும்பங்களாகி விட்டன. இதற்கு ஏற்றதுதான் சிட்டு சுரை. இது கால் கிலோ, அரை கிலோ எடைதான் இருக்கும். உள்ளங்கைக்குள் அடங்கிவிடும். ஆனால் கொடியில் சரம், சரமாக காய்க்கும். இதை நாங்கள் பயிரிட்டு வருகிறோம். இதுபோல பல ரக காய்கறிகளை பயிரிட்டு, அவற்றின் விதைகளை சேகரித்து வருகிறோம். தமிழ்நாடு முழுக்க பயணித்து அங்கு கிடைக்கும் விதைகளை சேமித்து வைக்கிறோம். இதுபோல் ஒவ்வொரு பகுதிக்கும், அவர்களது பாரம்பரிய விதைகள் அடங்கிய விதை வங்கி, விதை ஆதார மையங்களை நிறுவ இருக்கிறோம். இதன்மூலம் அழிவின் விளிம்பில் உள்ள நமது பாரம்பரிய காய்கறி, கீரை, கிழங்கு விதைகளை மீட்டு அடுத்த தலைமுறைக்கு தருவது தேவையான ஒன்றுதானே? என்கிறார். நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுன்டேசன் மூலம் சிறந்த சேவையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உழவர் விருதும் ஒரு லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. அந்த விருது இந்தாண்டு சுந்தருக்கு வழங்கப்பட்டது. கடந்த வாரம் சென்னையில் நடந்த விழாவில் இந்த விருதை பெற்று திரும்பியிருக்கிறார் சுந்தர்.தொடர்புக்கு: சுந்தர்: 94451 88965.தொகுப்பு: அ.உ.வீரமணி …