சிவகாசி/ஏ.பண்ணை, ஆக.3: வெம்பக்கோட்டை சார்பு ஆய்வாளர் வெற்றி முருகன் தலைமையில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரியப்பன்(34), வீட்டின் அருகே அரசு அனுமதி இல்லாமல், எளிதில் தீப்பற்றக்கூடிய சரவெடிகள், சோர்சா வெடிகள் மற்றும் கருந்திரி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் ரூ.3000 மதிப்புள்ள வெடி மருந்து பொருட்களை பறிமுதல் செய்த ேபாலீசார், வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சிவகாசி என்.கே.ஆர். பெரியண்ணன் ரோடு பகுதியை சேர்ந்தவர் சாக்ரடீஸ்(64). இவர் ஊராம்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் உதிரி சோர்சா வெடிகள் தயார் செய்து விற்பனைக்காக வைத்திருந்தார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியை சேர்ந்த லட்சுமணன்(42) அனுமதி இன்றி பட்டாசுகளை அட்டைப் பெட்டியில் வைத்திருந்தார். சிவகாசி கிழக்கு போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். சிவகாசி அருகே பாறைப்பட்டி திருப்பதிநகரை சேர்ந்த மாரிச்செல்வம்(41) நாரணாபுரம் ரோடு சரஸ்வதி நகரில் உள்ள செட்டில் அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்(39) தனது வீட்டில் பின்புறம் அனுமதி இன்றி பட்டாசுகளை ஒதுக்கி வைத்திருந்தார். சிவகாசி கிழக்கு போலீசார் 2 பேரையும் கைது செய்து, ரூ.38 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.