சிவகாசி , ஜூன் 2: சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு கடையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உடல் சிதறி பலியானார். அதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் பட்டாசு கடைகள், வீடுகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகாசி உட்கோட்டத்தில் டிஎஸ்பி தனஞ்ஜெயன் ஆலோசனையின் பேரில் வீடுகள், பட்டாசு கடைகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு குறித்து போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகாசி தெய்வானை நகர் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடை பின்புறம் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு புகைப்படத்துடன் தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து சிவகாசி டவுன் போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அங்கு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது தெரியவந்தது. மூட்டை மூட்டையாக பட்டாசுகள், பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் பண்டல்கள் கிடப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சித்துராஜபுரத்தை சேர்ந்த பால்பாண்டி, சாமிபுரம்காலனியை சேர்ந்த வைரமுத்து, செங்கமலப்பட்டி முருகன் காலனியை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விஜயகுமாரை கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர். ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.