Wednesday, July 16, 2025
Home மகளிர்நேர்காணல் விண்ணைத் தாண்டி வருவாயா?!

விண்ணைத் தாண்டி வருவாயா?!

by kannappan
Published: Updated:

நன்றி குங்குமம் தோழி போலந்து நாட்டில் விண்வெளிப் பயிற்சிக்கு தேனியை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வாகி அசத்தி இருக்கிறார்.தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த உதயகீர்த்திகாவுக்கு போலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மையத்தில், பிற நாட்டு விண்வெளி வீரர்களுடன் இணைந்து பயிற்சி எடுக்கவும், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் 20 மாணவர்கள் இந்தப் பயிற்சிக்காகத் தேர்வாகி உள்ளனர்.  அதில் இந்தியாவில், நம் தமிழகத்தில் இருந்து உதயகீர்த்திகா மட்டுமே செல்கிறார். ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து விண்வெளி பயிற்சியை பெறவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இருக்கிறார் உதய கீர்த்திகா. அது 2012-ம் ஆண்டு. மகேந்திரகிரியில், இஸ்ரோ சார்பில் ‘சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்கிற தலைப்பில் விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் இருந்து, தமிழ்வழி கல்வி பயின்ற மாணவியான உதயகீர்த்திகாவும் கலந்துகொண்டு மாநில அளவில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். தொடர்ந்து  2014-ல் மற்றொரு போட்டியிலும் பங்கேற்று, மீண்டும் முதலிடம் பெற்று அசத்தி இருக்கிறார். இவரின் கட்டுரையைக் கண்டு வியந்த ஆய்வாளர்கள், கீர்த்திகாவை விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக மேல்படிப்பு படிக்க அறிவுறுத்தியுள்ளனர்.  இந்நிகழ்வு கீர்த்திகாவுக்கு விண்வெளி மீதான ஆசையைத் தூண்டி இருக்கிறது.  தொடர்ந்து விதவிதமாக விண்வெளிக் கனவுகளைக் காணத் தொடங்கியிருக்கிறார் கீர்த்திகா? அவரது கனவில் நட்சத்திரங்களும், நிலவும், சூரியனும், பூமியும் சுற்றிச் சுழன்று வட்டமடித்திருக்கின்றன. எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை தாமோதரன் ஒரு ஓவியர் மற்றும் எழுத்தாளர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவரின் மாத வருமானம் மிகமிகக் குறைவு. இவரின் தாயார் அமுதா வழக்கறிஞர் ஒருவரிடம் தட்டச்சராக இருக்கிறார்.  பெற்றோரின்  குறைந்த வருமானத்தில் சிரமப்பட்டு தன் பள்ளிப்படிப்பை முடித்தவர், விண்வெளி ஆராய்ச்சி படிப்பைத் தொடர பணம் இன்றித் தவித்துள்ளார். ஆண்டுக்கு 4 லட்சம் கல்விக் கட்டணத்தோடு, தங்கிப் படிப்பதற்கான செலவும் சேர்த்து 7 லட்சம் வரை ஆகும் என்கிற நிதர்சனம் புரிய, கனவிலும் இது நடக்காது என்கிற நிலையில் அவரின் குடும்பம் தத்தளித்துள்ளது. இருப்பினும் மகளின் ஆசைக்கு பெற்றோர் தடை எதுவும் சொல்லாமல், மேற்படிப்பிற்கான சாத்தியங்களைத் திட்டமிட்டுள்ளனர். நேசக்கரம் நீட்டிய தெரிந்தவர்களின் உதவியோடு, உக்ரைன் நாட்டில் செயல்படும், உலகின் தலைசிறந்த விண்வெளி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘கார்கியூ நேஷனல் ஏரோ ஸ்பேஸ்’ யுனிவர்சிட்டியில் இணைந்து ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கிறார். முதல் 6 மாதங்கள் மொழிப் பிரச்னைகள் இருந்தாலும், விண்வெளி குறித்த விஷயங்களைத் தொடர்ந்து படித்ததால் பாடத்திட்டத்தில் இவருக்கு பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை என்கிறார். எனது தேடலும், பெற்றோர் அளித்த ஊக்கமும், தெரிந்தவர்களின் உதவியும்  எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. தொடர்ந்து கல்லூரி படிப்பிலும் 92.5 சதவிகித மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றேன் என்கிறார் தன்னம்பிக்கையையும், புன்னகையையும் உதடு களில் உதிர்த்து. வான்வெளி என்னை வசீகரித்த அனுபவம் வார்த் தைகளால் விவரிக்க முடியாதது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் ஈர்க்கப்பட்டு விஞ்ஞானத்தின்  மீது ஆசை ஏற்பட, விண்வெளி சார்ந்த கனவுகளோடு அது குறித்த புத்தகங்களாகத் தேடிப் படித்தேன். வான்வெளி தொடர்பான அத்தனை போட்டிகளிலும் களம் இறங்கினேன். ‘‘ஸ்பேஸுக்கு போக வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் கூடிக்கொண்டே சென்றது. விண்வெளி ஆய்வுகள், ராக்கெட் தொடர்பான விஷயங்கள் எனத் தேடித்தேடி தெரிந்துகொள்ள தொடங்கினேன்.  எனது விண்வெளித் தேடல்கள் கட்டுரைகளாகவும் மாறியது. எட்டாம் வகுப்பிலேயே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கண்டுபிடிப்பை சமர்ப்பித்து இன்ஸ்பயர் விருதைப் பெற்றேன்.  அடுத்தடுத்த வெற்றிகளை வேட்டையாடும் வேட்கை மனதில் இயல்பாய் உருவாக, அதன் தொடர்ச்சியாய் விண்வெளி ஆய்வு மையம் நடத்திய மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, விண்வெளி ஆராய்சி மையத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பையும் பெற்றேன். படித்த விஷயங்களை நேரில் பார்த்தது, பரவசமான அனுபவமாக எனக்கு இருந்தது’’ என்கிறார் இவர்.‘‘இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் அமெரிக்காவின் நாசாவில் இருந்து விண்வெளிக்குச் சென்றவர்கள். நானும் அவர்களைப் போலவே விண்வெளிக்குச் செல்வேன். ஆனால் இந்தியாவின் இஸ்ரோ தளத்தில் இருந்து விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது ஆசை’’ என்கிறார் மிகவும் தீர்க்கமாக. நாசாவுக்கு இணையாக விண்வெளி திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்துவதை மங்கள்யான் திட்டத்தின் மூலம் உலகம் அறிந்ததாக தெரிவிக்கும் இவர், வருங்காலங்களில் பல விண்வெளி திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்துவதன் மூலம் மேலும் வலிமை பெறும் என்கிறார். இஸ்ரோவின் பல வெற்றிகரமான திட்டங்களை பட்டியலிடும் கீர்த்திகா, சந்திராயன் மற்றும் ஆதித்யான் திட்டங்கள் குறித்து தனது பிரமிப்பான பார்வையையும் பதிவு செய்துள்ளார்.  இஸ்ரோ 2021-ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதில் நானும் ஒருவராய் இருக்க வேண்டும் என்பதை எனது இலக்காக வைத்திருக்கிறேன் என முடித்தார். மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் படித்தால் மட்டும்தான் உயர்கல்வியை வெளிநாட்டில் தொடர முடியும், வான்வெளி ஆராய்சிகளை மேற்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தை உடைத்து, தமிழ் வழியில் படித்தாலும் விண்ணைத் தாண்டிய சாதனைகளைச் செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார் விண்ணில் மிளிர இருக்கும் இந்த நட்சத்திரம்.  வாழ்த்துகள் கீர்த்திகா!!  நீ விண்ணைத் தாண்டும் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்..தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi