விக்கிரவாண்டி, அக். 25: தமிழகத்தில் ஆயுத பூஜையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை வழக்கமாக சென்னையில் இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 651 பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் மற்ற ஊர்களில் இருந்தும் 1700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்த நேற்று அனைவரும் சென்னை சென்றனர். இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுமார் 50,000 வாகனங்கள் கடந்து சென்றதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் நேற்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருந்து சென்றன.