தர்மபுரி, நவ.9: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி பணியாளர்கள் சங்கம் சார்பில், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி தலைமையில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் விடுதிகளில் 10, 15 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக விடுதியில் சமையலர், இரவு காவலர்களாக பணிபுரிந்து வரும் அனைவருக்கும், பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுதியில் சமையலர்களாக பணி புரிந்து வரும் பணியாளர்களை, பணி வரன்முறை செய்ய வேண்டும். மேலும் தகுதிகாண் பருவம் முடித்ததாக ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, ஏஐடியூசி துணை தலைவர்கள் சுதர்சனன், முருகேசன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி பணியாளர்கள் சங்க கெளரவ தலைவர் மதுசூதனன், மாவட்ட தலைவர் முத்து, மாவட்ட செயலாளர் மாதேஸ், பொருளாளர் கலைச்செல்வன் மற்றும் பலர் உடனிருந்தனர்.