நாமக்கல், ஆக.14: நாமக்கல் அரசு மாணவர் விடுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய 10 காப்பாளர்கள் 5 மணி நேர விசாரணைக்கு பின்பு விடுவிக்கப்பட்டனர். நாமக்கல் தில்லைபுரத்தில் உள்ள அரசினர் பிற்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடுதி காப்பாளர்களின் ரகசிய கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, கணக்கில் வராத ₹1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் கேட்டதற்கு அவர்கள் சரியான கணக்கு காட்டவில்லை.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை 10 பேரிடம் தனித்தனியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களின் வாக்குமூலங்களை எழுத்துப்பூர்வமாக பெற்றனர். இதையடுத்து, 10 பேரும் விடுவிக்கப்பட்டனர். அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பல்வேறு முறைகேடுகள் செய்து மாதம் மாதம் விடுதி காப்பாளர்கள் பணத்தை பங்கிட்டுக் கொள்கிறார்கள். அதன்படி, நாமக்கல் மாணவர்கள் விடுதியில் பணத்தை பங்கிடும் போதுதான், 10 பேரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், சோதனை விபரங்கள் குறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனருக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் 10 பேர் மீதும் மேல் நடவடிக்கை எடுப்பார்கள். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு தடுப்பு சட்டப்பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர்.