நன்றி குங்குமம் தோழிசன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் ஹீரோயின் துளசியை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. இன்றைக்கும் அவர் சன் டிவியில் அழகு தொடரில் வரும் சுதாவாக, பல இல்லத்தரசிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மாண்புமிகு மாணவன், காதல் டாட்காம், ஜெர்ரி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கும் நடிகை ஸ்ருதி ராஜ் நம்மிடம் பகிர்ந்துக் கொண்ட சில சுவாரஸ்யமான தகவல்கள்.“நடிக்க எப்போதும் எனக்கு விருப்பம் கிடையாது. என்னை நடிக்க வைத்து பார்க்க அம்மாக்கு ஆசை இருந்ததால், எல்லா முன்னெடுப்பும் அவங்கதான் பண்ணாங்க. இன்று இந்த இடத்தில் இருப்பதற்கும், எனக்கு வரும் பாராட்டுகள் எல்லாவற்றிற்கும் காரணம் அம்மா. என்னை நடிக்க வைப்பதில் அவ்வளவு விருப்பம். இன்றைக்கும் நான் வெளியில் போகும் போது ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. இதை காப்பாற்றிக் கொள்வதற்கும், இன்னும் நடிப்பில் எதாவது சாதிக்க வேண்டுமென்றும் முழு ஈடுபாட்டோடு செய்து வருகிறேன். என்னால் முடிந்த அளவு இம்ரூவும் பண்ண பார்க்கிறேன்.’’இதுவரை நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம்? கண்டிப்பா, தென்றல் துளசி. எனக்கான ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. படங்களெல்லாம் பெருசா ஏதும் நடிக்கவில்லை. ஒருவேளை திரைப்படங்கள்தான் நடிக்க வேண்டுமென்று அதிலே முழு கவனம் செலுத்தி இருந்தால் வேறு மாதிரி வந்திருக்கலாம்.எதிர்காலத் திட்டம்எதிர்காலத்தை எப்போதும் நான் திட்டமிடுதல் கிடையாது. அது இன்று வரைக்கும் நடந்ததில்லை. என்ன நடக்குமோ அது கண்டிப்பா நடக்கும். கடவுள் எதாவது ஒரு முடிவெடுத்திருப்பார். உதாரணத்திற்கு இந்த கதாபாத்திரம் நான் நடிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கலாம். ஆனால், அதை தீர்மானிக்கும் இடத்தில் நான் இல்லை. நானே தயாரிப்பாளர், நானே இயக்குநர் என்றால் அதெல்லாம் நினைத்துப் பார்க்கலாம். அது இரண்டுமே கிடையாது. படங்கள் பார்க்கும் போது இந்த கதாபாத்திரங்களெல்லாம் நடிக்கலாம் என்று நினைத்தது மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மேம் மாதிரி. இந்த மாதிரி நிறைய கதாபாத்திரங்கள். எனவே இது தான் பண்ண வேண்டும், அதுதான் பண்ண வேண்டும் என்றில்லை. நமக்கு வருவதில் எது நல்லா இருக்கும் என்பதைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். எனக்குத் தெரியாத விஷயங்கள், என்னால் பண்ண முடியாது என்று நினைக்கின்ற விஷயங்களைப் பண்ண முடியாது என்று தெளிவாகச் சொல்லிவிடுவேன். அதே மாதிரி யார் கூட நடிக்கின்றோம் என்பது முக்கியமில்லை. கதாபாத்திரத்தின் தன்மைதான் முக்கியம்.நீங்கள் மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதும், கற்றுக் கொடுத்ததும்?நான் பெரிய நடிப்புத் திலகம், பயங்கரமான காஸ்டியூம் ஐடியா இருக்கிற ஆள் எல்லாம் கிடையாது. ஆனால், நமக்கு ஓரளவு தெரியுது இது தப்பானதுன்னு. அதை அவர்களின் மனநிலையைப் பொறுத்து சொல்லிப் புரியவைப்பேன். நண்பர்களிடமும், புதிதாக நடிக்க வருபவர்களிடமும் சொல்லும் போது, அவர்கள் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அடுத்தடுத்துக் கண்டிப்பா சொல்லுவேன். அதே போல் நானும் ஒவ்வொரு விஷயமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். அது சிறியதோ, பெரியதோ… தினம் தினம் ஒவ்வொருவரிடமும் கற்றுக் கொள்கிறேன். கற்கும் மன நிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.மூத்த நடிகர்களிடம் கற்றுக் கொண்டது?இப்ப ரேவதி மேம் கூட வேலை பார்க்கிறேன். எவ்வளவு உயரத்திற்கு போனாலும், ஒரு புது ஆள் வந்தால் அவர்களை எந்த ஒரு பதட்டமும் ஏற்படுத்தாமல், பீஸ்ஃபுல்லா கையாள்வதை இவர்களிடம் கற்றுக் கொண்டேன். இதைப் புதிதாக நடிக்க வருபவர்களிடம் பார்ப்பது அரிது.அதே போல் தலைவாசல் விஜய் சார், ரேவதி மேம் போன்ற மூத்த நடிகர்கள் நம்மகிட்ட பேசுவாங்களா என்று நினைத்திருக்கையில், அவ்வளவு எளிமையா பேசுவாங்க. இறுதியில் குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி பேசுவோமோ அந்த நிலைக்கு வந்துவிடுவோம்.ரேவதி மேம் எந்த கதாபாத்திரமாக இருக்காங்களோ அப்படித்தான் மூவ் பண்ணுவாங்க. அதிலிருந்து கொஞ்ம் கூட வெளியில் வர மாட்டாங்க. காஸ்டியூம் இப்படி வேணும், அப்படி வேணும் என்றெல்லாம் இருக்க மாட்டாங்க. அழகம்மைக்கு என்னென்ன தேவையோ அப்படித்தான் இருப்பாங்க.நடிப்புத் தவிர…வீட்டில் இருக்கும் போது சின்னச் சின்னதா பெயிண்டிங், எம்ராய்டிங் பண்ணிட்டு இருந்தேன். ஆனால், இப்போ அதெல்லாம் பண்ணுவதற்கு நேரமில்லை. இப்பெல்லாம் நேரம் கிடைத்தால் துணிகள் வாங்குவது, அதற்கான ஆக்சசரிஸ் வாங்குவதுன்னு சரியா போகுது. நிறைய வீடியோ மீம்ஸ், மியூசிக்கலி’யில ஈடுபாடு கொண்டிருக்கும் நீங்கள், ‘டிக் டாக்’கிற்கு தடை கோருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதனால் ஒரு பிரச்னை வருகிறதென்றால் அதை தடை செய்யலாம். நம்ம ஆசைப்பட்ட பாடல், டயலாக்குகளை நம்மால் பண்ண முடியாது. லெஜண்ட் ஆக்ட்டர்ஸ் அதை பண்ணிட்டு போயிட்டாங்க. அதை நாம பேசி பார்த்தா எப்படி இருக்கும் என்கிற ஆசைதான். நடிகர்களாக இருக்கும் நாங்கள் ஏன் அதை பண்ணுகிறோம் என்றால் சின்ன ரிலாக்ஸ்ஷேசன் அவ்வளவுதான். இதே போன்றதொரு ரிலாக்ஸ்ஷேசனுக்காகவும், அந்த வசனம், பாடல் மீதுள்ள ஈர்ப்பினாலும் பண்ணுவது தவறு கிடையாது. ஆனால், அதை தவறாக பயன்படுத்தும் போதுதான் பிரச்சினைகள் வருகிறது. எனவே பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.நடிகர் விஜயோடு நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தால்?அப்படி கிடைத்தது என்றால் எந்த பக்கத்திலிருந்து ஓடுகிறேன் என்று தெரியாது. இப்படி ஒரு வாய்ப்பு வரும் போது யார்தான் வேண்டாம்ன்னு சொல்லுவாங்க. அவர்கூட சின்ன வயதில் நடித்திருக்கிறேன். விஜய் அண்ணாவுக்கு கண்டிப்பா என்னை ஞாபகம் இருக்காதுன்னு நினைக்கிறேன். அந்த மாதிரியெல்லாம் நடிக்க வாய்ப்பு வந்தால் அழகு ஷூட்டிங் லீவ் கொடுத்துட்டு போய்டுவேன்.நீங்கள் பணியாற்றிய தொடர்களின் இயக்குநர்கள் பற்றி?‘தென்றல்’ தொடரின் இயக்குநர் குமரன் சார். எனக்கு நடிப்பின் குரு என்றால் அவர்தான். தென்றல் நடிக்கும் போது நடிப்பு அவ்வளவாக தெரியாது. சின்னச் சின்ன விஷயம் முதற்கொண்டு முழுவதும் சொல்லிக் கொடுத்தது அவர்தான்.‘ஆபீஸ்’ தொடரின் பிரம்மா சார், எப்போதுமே காமா இருக்கக் கூடியவர். அந்த நாடகத்தில் புதுசா நடிப்பதற்கு பலர் வந்தாங்க. 25 டேக்குகளுக்கு மேல் எல்லாம் போகும். அப்ப கூட பொறுமையா ஒன்ஸ்மோர் சொல்லுவார். ‘அன்னக் கொடியும் ஐந்து பெண்களும்’, ரவி சார். ரொம்ப, ரொம்ப கூல் பெர்சன்.‘அழகு’ ரத்தினம் சார், அவரெல்லாம் வேற லெவல். டைரக்ஷன்னா இப்படி இருக்கும் என்பதை உடைத்து எளிமையாக்கியவர். ஸ்பார்ட்டை எப்போதும் ரிலாக்ஸாக வைத்திருப்பவர். நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் நடிப்பு வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறீர்களா?சத்தியமா… நீங்கலெல்லாம் இன்று இன்டர்வியூ எடுப்பீங்கன்னு நினைச்சுக் கூடப் பார்க்கல. நான் சொன்ன மாதிரி முதலில் எனக்கு நடிப்பதில் ஆசையோ, திட்டமோ இல்லை. அந்த மாதிரி இருக்கும் போது இந்தளவு வந்திருக்கிறோம் என்றால் சந்தோஷமாகத்தானே இருக்கும். சின்னத்திரையில் நான் என்னென்ன நினைத்தேனோ அதெல்லாம் ஆகியிருக்கிறேன். பெரிய திரையில் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. நான் நினைத்ததை விட ரொம்பவே சந்தோஷமா இருக்கிறேன்.– நடிகை ஸ்ருதி ராஜ்தொகுப்பு:அன்னம் அரசு,படம்:ஏ.டி.தமிழ்வாணன்…
விஜய் நடிக்க கூப்பிட்டா ஷூட்டிங்லீவ் போட்டுடுவேன்!
previous post