திருப்போரூர், அக்.29: திருப்போரூரை அடுத்துள்ள மேலையூர் கிராமம், பழண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது, மகன் விஜய் சாரதி (16). நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வீட்டில் தனது தாயாரிடம் தான் விக்கிரவாண்டியில் நடைபெறும் நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு செல்ல உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு, விஜய்சாரதியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து, இன்னும் 5 மாதங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வர உள்ளதால் அதற்கு படிக்குமாறும், அரசியல் கட்சி மாநாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 27ம்தேதி காலை 6 மணியளவில் வீட்டை விட்டு வெளியேற்றி விஜய் சாரதி, அதே பகுதியில் இருந்து உறவினர்களுடன் புறப்பட்ட வேன் ஒன்றில் ஏறி மாநாட்டிற்கு சென்றுள்ளார். திண்டிவனம் அருகே ஒலக்கூர் என்ற இடத்தில் சென்றபோது விஜய் சாரதி வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, வேனில் உடன் சென்றவர்கள் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு, மருத்துவர்களிடம் தந்தை தன்னை மாநாட்டிற்கு செல்லக்கூடாது என்று கண்டித்ததால் மனமுடைந்து அரளி கொட்டையை அரைத்து சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, விஜய் சாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.