துரைப்பாக்கம், செப்.16: விசைப்படகில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் புகுந்ததால், நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். காசிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முத்து (70). இவருக்கு, சொந்தமான விசைப் படகில், அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் பீச்சான் (77), சுப்புராயன் (61), கண்ணன் (67), வேலு (54), மகேந்திரன் (57), குமார் (57) ஆகிய 6 பேர், நேற்று முன்தினம் மாலை விசைப்படையில் காசிமேட்டில் இருந்து மாமல்லபுரம் அருகே, மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது விசைப்படகில் திடீரென ஓட்டை விழுந்ததால், தண்ணீர் புகுந்து மூழ்க தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் ஓட்டையை அடைத்தபடி அவசர அவசரமாக காசிமேட்டிற்கு புறப்பட்டனர். நேற்று காலை அக்கரை அருகே வந்தபோது படகு கவிழும் நிலையில் இருந்தது. இதனையடுத்து, பனையூர் மீனவ கிராமத்தை சேர்ந்த உறவினர் ராஜா என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். இதனையடுத்து, ராஜா தனது பைபர் படகுமூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 6 பேரையும் காப்பாற்றினார். சிறிது நேரத்தில் 6 பேரும் வந்த விசைப்படகு கவிழ்ந்தது. காப்பாற்றப்பட்ட 6 பேரும் பனையூர் கடற்கரைக்கு வந்தனர். தகவலறிந்த படகின் உரிமையாளர் முத்து, 6 பேரையும் காசிமேட்டிற்கு அழைத்துச் சென்றார். நடுக்கடலில் கவிழ்ந்த விசைப்படகு கரை ஒதுங்கியது. இச்சம்பவம் மீனவ கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.