செய்யாறு, ஆக.23: செய்யாறு அருகே கைத்தறியை விசைத்தறியில் நெய்த நெசவுக்கூடத்திற்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நெசவுக்கூடங்கள் இயங்கி வருகிறது. இதில் சில விசைத்தறிக்கூடங்களில் கைத்தறி ரகங்களை நெசவு செய்வதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதனால் ஜவுளித் துறை மண்டல அமலாக்க துறையினர் பலமுறை ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொண்டு, விசைத்தறியில் கைத்தறி ரகங்களை நெசவு செய்யக்கூடாது எனக்கூறி எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னை ஜவுளித் துறை மண்டல அமலாக்க பிரிவு அலுவலர் மனோகரன் தலைமையிலான குழுவினர், செய்யாறு திருவத்தூர் பகுதியில் கிழக்கு மாட வீதியில் விசைத்தறிக்கூடங்களில ஆய்வு செய்தனர். அப்போது, பாண்டியன் என்பவரின் விசைத்தறிக்கூடத்தில் கைத்தறி நெசவு ரகங்கள் சட்ட விரோதமாக நெசவு செய்வதை கண்டனர். இதையடுத்து அந்த விசைத்தறிக் கூடத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து மண்டல அலுவலர் மனோகரன் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாண்டியன் மீது சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.