பெரம்பலூர், ஆக 22: விசுவக்குடி அணைக் கட்டில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணி குறித்து சிறப்புப் பயிற்சியை அளித்தனர்.தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையினர், மாவட்டத்தில் பணிபுரியும் ஆயுதப்படை போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு பேரிடர் மீட்புப்பணிகள் குறித்த சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றனர். இந்த பயிற்சியானது 19ம் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்பயிற்சியில் பேரிடர் என்றால் என்ன, அவற்றின் வகைகள், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து காவல் துறையினருக்கு விரிவாக வகுப்புகள் எடுத்தும், பயிற்சிகள் அளித்தும் வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் நீர்நிலைகளில் சிக்குபவர்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு படகுகள் மூலம் மீட்பது? நீரில் சிக்கிக்கொண்டவபர்களை எவ்வாறு உயிர்க் காக்கும் பொருட்களைக்கொண்டு தப்பிப்பது என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் என ஆண், பெண் உள்பட 60 பேர் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்.