சென்னை, ஆக. 20: கைதியிடம் பணம் கேட்டதுடன், பொய் வழக்கு தொடர்வதாக மிரட்டல் விடுத்த உதவி ஜெயிலர், வார்டன்களுக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேலூர் சிறை டி.ஐ.ஜி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிப்பறியின் போது மரணம் ஏற்படுத்தும் வகையில் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது கணவரிடம் பணம் கேட்டு மிரட்டும் சிறை உதவி ஜெயிலர் சுந்தர்ராஜன், வார்டன்கள் சுரேஷ், சக்திவேல், பிரேம் ஆனந்த் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதாகிருஷ்ணனின் மனைவி மரகதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சிறைத்துறை அதிகாரிகளின் மிரட்டல் காரணமாக தினேஷ் என்ற கைதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து கைதிகளிடம் அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இதையடுத்து, பணம் கேட்டு மிரட்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுக்கு மனு கொடுத்தேன். மனு மீது எந்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா இல்லையா என்பது தெரிய வேண்டும். எனவே, இந்த புகார் குறித்து வேலூர் சிறை டிஐஜி விசாரணை நடத்தி செப்டம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.