திருச்சி, ஜூன் 2:முன்விரோத தகராறில் ஒருவரின் மண்டையை உடைத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். திருச்சி ரங்கம் திம்மராய சமுத்திரத்தை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (46). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நிவாசன் என்பவருக்கும் இடையே கோயில் பிரசாதம் விற்பனை செய்யும் கடை டெண்டர் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் மே 29 அன்று நிவாசன் அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார், சர்மா மற்றும் சந்தானம் ஆகியோருடன் முரளி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர். அங்கு முரளி கிருஷ்ணனையும், அவரது மனைவியையும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தவர்கள், அவர் வீட்டின் கதவை உடைத்து, தாழ்ப்பாளால் முரளி கிருஷ்ணனை தாக்கினர். இதில் முரளி கிருஷ்ணன் மண்டை உடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து முரளி கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ரங்கம் போலீசார் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.