Saturday, July 20, 2024
Home » விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்த வேட்பாளரால் பரபரப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்த வேட்பாளரால் பரபரப்பு

by Karthik Yash

விக்கிரவாண்டி, ஜூன் 15: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று 5 சுயேட்சைகள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10ம்தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று காலை தொடங்கியது. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். டெபாசிட் பணம் பத்தாயிரத்தை சில்லரை நாணயங்களாக எடுத்துவந்து செலுத்தினார்.

விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகரனிடம் கோவை மாவட்டம் சுந்தராபுரம் தாலுகாவைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் நேற்று சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார். இவர் 44வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்கிறார். இவர் ஏற்கனவே கோவையில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது சவப்பெட்டியுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜனும் நேற்று மனு தாக்கல் ெசய்தார். அகில இந்திய அளவில் இவர் 242வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும் நேற்று சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார். இவர் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை வலியுறுத்தி டெபிட் கார்டுகளை மாலையாக அணிவித்து வித்தியாசமாக வேட்புமனுதாக்கல் செய்தார்.

ரூபாய் நோட்டு மாலையுடன் டெபாசிட் பணத்தை சில்லரையாக கொண்டுவந்த வேட்பாளர் அக்னி ஆழ்வார் கூறுகையில், பொதுமக்கள் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. நம் ஓட்டை விற்க கூடாது. தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். டிஜிட்டல் பரிமாற்றம் இல்லாமல் சில்லரை வர்த்தகம் இருப்பதற்காக பத்தாயிரம் ரூபாய் பணத்தை வெறும் சில்லரையாக கொடுத்துள்ளேன், என்றார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனர் காந்தியவாதி ரமேஷ் என்பவர் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில், தேர்தலில் வாக்குப்பதிவில் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வந்த நிலையில் சாதாரண தெருவோரக்கடையில் கூட டிஜிட்டல் முறையில் பணம் பெறப்படுகிறது. ஆனால் தேர்தல் துறை வேட்புமனு தாக்கலின்போது டிஜிட்டல் முறையில் பணம் பெறாதது ஏன் என கேள்வி எழுப்பினார். இதுவரை எம்.பி., ஜனாதிபதி உள்ளிட்ட 12 தேர்தலில் போட்டியிட்டதாகவும், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது தன்னை தடுத்ததாகவும், அதற்காக வழக்கு கொடுத்துள்ளதாகவும், தெரிவித்தார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நேற்று 5 பேர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

fourteen − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi