விக்கிரவாண்டி, நவ.6: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் நிதி நிறுவனம் தீபாவளி மோசடி வதந்தியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவாசியை தலைமையிடமாக கொண்ட தனியார் நிதி நிறுவனத்தின் கிளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நகர பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்களுக்கு தினசரி கடன் வழங்கி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உள்ளூர் ஏஜெண்டுகள், பைனான்ஸ் ஊழியர்கள் மூலம் மளிகை பொருட்கள், பர்னிச்சர்ஸ், நகை, பாத்திரங்கள் என பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்து தீபாவளி சீட்டு பிடித்து வந்தனர். இதில் தீபாவளிச் சீட்டாக மாதம் ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து வந்தனர். இச்சீட்டில் சுமார் 4,500 பேர் ரூ.1.5 கோடி அளவில் பணம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
நவம்பர் 1ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள் கொடுக்காததால் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. வாடிக்கையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் விக்கிரவாண்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டினர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் அங்கு வந்து நிறுவனத்தின் மேலாளர் காலேஷா(35) என்பவரிடம் விசாரணை நடத்தினர். பரிசு பொருட்களை தந்துவிடுவதாக போலீசாரிடம் உறுதி அளித்ததால் சிறைவைக்கப்பட்ட ஊழியர்களை போலீசார் விடுவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.