விகேபுரம், நவ.22: விகேபுரத்தில் லாரி டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். விகேபுரம் மேலக்கொட்டாரம் கீழநடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் விஜய் (25). லாரி டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. இது சம்பந்தமாக இதே தெருவை சேர்ந்த சமையல் வேலை செய்து வரும் செந்தில்வேல் முருகன் மகன் பட்டுராஜன் (35) என்பவர் இருவரிடமும் பேசி சமாதானம் செய்து வைக்க முயற்சித்துள்ளார். அப்போது சின்னத்துரைக்கு ஆதரவாக பட்டுராஜன் பேசி வருவதாக விஜய் நினைத்துள்ளார். இதனால் விஜய்க்கும் பட்டுராஜனுக்கும் முன்பகை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பட்டுராஜன் கத்தியால் விஜய்யை குத்தியுள்ளார். இதில் விஜய்யின் உடலில் பல பகுதிகளில் கத்தி குத்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விஜயை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விகேபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் வழக்கு பதிவு செய்து பட்டுராஜனை கைது செய்தார்.