Tuesday, June 6, 2023
Home » வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் யுனைட்டெட்வே!

வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் யுனைட்டெட்வே!

by kannappan

நன்றி குங்குமம் தோழி ‘‘2020ம் ஆண்டு உலகம் முழுதும் இப்படி ஒரு பேரடியை சந்திப்போம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆறு மாதம் எந்த ஒரு தொழிலும் இயங்காத நிலையில் கடை நிலை ஊழியர்கள், அன்றாட தினக்கூலி தொழிலாளர்கள், சிறு தொழிலில் ஈடுபட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடி வந்துள்ளனர். இன்று பல தளர்வுகள் அறிவித்த நிலையிலும் அவர்களால் முன்பு போல் மீண்டு எழ முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இவர்களுக்காகவே தங்களால் முடிந்த சேவையினை செய்து வருகிறது ‘யுனைட்டெட் வே’ என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம்’’ என்கிறார் இந்நிறுவனத்தின் விளம்பர துறையின் நிர்வாகியான ஸ்ருதி.‘‘நான் பொறியியல் பட்டதாரி. கல்லூரி முடிச்சிட்டு தனியார் நிறுவனத்தில் விற்பனைத் துறையில் வேலைப் பார்த்து வந்தேன். நான்கு வருடம் அங்கு வேலைப் பார்த்து வந்த எனக்கு ‘யுனைட்டெட் வே’யில் வேலைக்கான வாய்ப்பு வந்தது. இங்கு வந்து ஒன்றரை வருடமாகிறது. எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் அதை எவ்வாறு செய்வதுன்னு தெரியல. என்னால் முடிந்தது என்றால் எங்க வீட்டில் வேலைக்கு வருபவர்களுக்கு தேவையான உதவியை செய்வது மட்டும் தான். இங்கு வந்த பிறகு உலகளவில் பலருக்கு உதவி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது’’ என்றவர் அந்நிறுவனத்தின் செயல்பாட்டினை பற்றி விவரித்தார்.‘‘இந்த நிறுவனம் 100 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 2010ம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் என மூன்று பாகமாக பிரிக்கப்பட்டதற்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது தான் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம். பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு செல்வதில்லை. காரணம் அவர்களுக்கான சூழல் அங்கு இல்லை என்பது தான்.பள்ளிகளில் மேல் தளத்திற்கு செல்ல படிக்கெட்டுகள் தான் இருக்கும். அதே போல், கழிவறையும் அவர்களுக்கானதாக இருக்காது. அவர்களுக்கும் கல்வி அறிவு அவசியம் என்பதால், பள்ளியில் அவர்கள் எளிதாக நடமாட சாய்வான நடைமேடைகள் மற்றும் கழிவறையிலும் மாற்றம் ஏற்படுத்தி தருகிறோம். அதற்குப் பின் இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சின்னதாக பங்க் கடை அமைச்சு தருகிறோம். அதை அவர்கள் டீ கடையாகவோ அல்லது பெட்டிக் கடையாகவோ, ஃபாஸ்ட்ஃபுட் உணவகம் என எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம்’’ என்றவர் இந்த கோவிட் பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைப்பு மூலம் என்னென்ன வசதிகள் ஏற்படுத்தி தந்துள்ளார் என்பதை விவரித்தார்.‘‘கோவிட் ஆரம்பிச்ச நாள் முதல் என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். சாலையில் பழம் மற்றும் பூ விற்பவர்களிடம் பேசிய போது, அவங்க சொன்ன ஒரே விஷயம் ஊரடங்கால் வருமானம் இல்லை என்பது தான். இரண்டு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக கூறினார்கள். அவர்களுக்கு மாதம் ஒரு வருமானம் ஏற்பாடு செய்து தருவதற்கு அமைப்பு மூலம் கிரவுட் ஃபண்டிங் முறையில் உதவி தொகையை திரட்டினோம். அதன் பிறகு இது போல், தினசரி சாலையோர வியாபாரிகள் மற்றும் தினக்கூலி செய்பவர்களை கண்டறிந்தோம். அவர்களை பற்றிய முழு விவரங்களை சேகரித்தோம். அதாவது அவர்களின் மாத வருமானம் மற்றும் அவர்களின் தேவை என்ன என்று அனைத்து விவரங்களையும் ஒன்று திரட்டி, அவர்கள் வங்கியில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பலர் எங்க நிறுவனம் மூலம் உதவி செய்ய முன் வந்ததால் ஊரடங்கின் போது, பாதிக்கப்பட்ட 1000 குடும்பத்திற்கு மேல் உதவி செய்ேதாம்’’ என்றவர் கடந்த மாதம் நடைபெற்ற ஜாய் கிவ்விங் வார திருவிழா மூலம் மேலும் பல குடும்பங்களுக்கு உதவி செய்ய முடிந்ததாக தெரிவித்தார். ‘‘பொதுவாக இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் தானம் செய்வது நம்முடைய மரபு. இந்த விழாவும் அதற்காக தான் கொண்டாடப்படுகிறது. இந்த விழா மூலம் ஒரு விர்சுவல் மாரத்தான் போட்டியினை அறிவித்து அதில் கிடைக்கும் உதவித் தொகையினை மக்களுக்கு தானமாக கொடுக்க முடிவு செய்தோம். கோவிட் காரணமாக பலர் வீட்டில் முடங்கி இருந்தார்கள். ஒரு வாரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட டார்கெட் வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங் அல்லது நடைப்பயிற்சி என எது வேண்டுமாகவும் இருக்கலாம். இதில் அவர்கள் பங்கு பெற செலுத்தும் கட்டணம் தான் பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக அமையும். யுனைட்டெட் வே உலகம் முழுதும் 40 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. மற்ற தொண்டு நிறுவனங்கள் போல் ஒரு குறிப்பிட்ட தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், அந்தந்த சமூகத்திற்கு என்ன பிரச்னை என்று அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டு வருவது தான் இதன் நோக்கம்’’ என்ற ஸ்ருதி தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், அதற்கு ஏற்ப இவர்களின் திட்டம் மாறுபட்டு வருவதாக தெரிவித்தார். ‘‘யார் வேண்டும் என்றாலும் உதவித் தொகை பெற முடியாது. ஒருவரின் மாத வருமானம், அவர்கள் செய்து வரும் தொழில், அவர்களின் மாத செலவுகள் என்ன என்று முழுமையான விவரங்களை கொண்டு தான் உதவித் தொகையை பெறமுடியும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து ஏரியாக்களிலும் மக்கள் குறித்த சர்வே எடுத்து அதற்கு ஏற்ப உதவியினை செய்து வருகிறோம். மேலும் தினசரி தொழிலாளர்களுக்கான ஒரு சங்கம் இருக்கு. அதன் மூலமும் மக்களின் விவரங்களை சேகரித்து உதவி செய்கிறோம். ஆரம்பத்தில் மாதம் ஒரு தொகையை அளித்தோம். தற்போது எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில், அவர்கள் தொழில் செய்ய முதலீடு தொகை அளித்து வருகிறோம். இதன் மூலம் அவர்கள் இழந்த வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க முடியும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எங்களின் மற்ற திட்டங்கள், மாற்றுத்திறனாளிக்காக பங்க் கடை அமைத்து தருவது, மாநகராட்சியில் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக எளிதாக செல்ல காரிடோர் மற்றும் பாத்ரூம் வசதிகள் ஏற்படுத்தி தருவது மற்றும் இந்த குழந்தைகள் படிக்க கல்வி ஊக்கத்தொகை அளித்து வருகிறோம். மேலும் சுற்றுச்சூழல் பராமரிப்பும் செய்து வருகிறோம். சென்னையை பொறுத்தவரை தண்ணீர் பற்றாக்குறை என்பது நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னை. தண்ணீரை சேகரிக்கவும், பூமியில் தண்ணீர் ஊறவும், ஆறு, கிணறு, குளங்களை தூர் வாரி அதை சுத்தம் செய்து, நிலத்தடி நீரின் தன்மை அதிகரிக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது’’ என்றவர் இந்தியா முழுக்க இத்தொண்டு நிறுவனம் இயங்கி வருவதாகவும், அந்தந்த மக்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்ப புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார் ஸ்ருதி.தொகுப்பு: ஷம்ரிதிபடங்கள்: ஜி.சிவக்குமார்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi