வாழப்பாடி, நவ.27: வாழப்பாடி அருகே விவசாய தோட்டத்தில் ஆடு திருடிய 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேத்துக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர், தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 21ம் தேதி மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் புகுந்து ஆடுகளை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில், 2 பேர் பட்டிக்குள் புகுந்து ஆடு திருடிச் செல்வது பதிவாகியிருந்தனர்.
இதுதொடர்பாக சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அசோக்ராஜ் மகன் கார்முகிலன்(21), அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் சுஜய்(19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள், முறையே சட்டக்கல்லூரியில் நான்காமாண்டும், தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டும் படித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின்பேரில் சிறையிலடைத்தனர்.