ஊட்டி,ஆக.31: ஊட்டி நகரின் மையப்பகுதியாக கிரீன்பீல்டு,சேரிங்கிராஸ் பகுதிகள் உள்ளன. மார்க்கெட் மற்றும் கமர்சியல் சாலை பகுதியில் இருந்து இப்பகுதிகளுக்கு செல்ல பெரும்பாலான மக்கள் வால்சம் சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இச்சாலையையே பயன்படுத்துகின்றனர். அதேபோல்,பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என பலரும் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், இச்சாலையில் கிரீன்பீல்டு பகுதியில் சாலையோரத்தில் கேசினோ சந்திப்பு முதல் எட்டினஸ் சாலை வரையில் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால், இவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், பள்ளி வாகனங்கள் வந்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, கனரக வாகனங்கள் வரும் போது, அவைகளுக்கு இடம் விட்டு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இச்சாலையோரத்தில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
ஒரு புறம் மட்டும் வாகனங்களை நிறுத்த காவல்துறையினர் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறத்தியுள்ளனர்.