திருவண்ணாமலை, ஆக.5: கேஒய்சி விவரம் பதிவு செய்வதாக கூறி வாலிபர் வங்கி கணக்கில் அபேஸ் செய்யப்பட்ட ₹66 அபேஸ் செய்யப்பட்ட ₹66 ஆயிரத்தை திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசார் ஒரேநாளில் அதிரடியாக மீட்டு ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி(30), தனியார் நிறுவன ஊழியர். இவரது செல்போனுக்கு நேற்று முன்தினம் ஒரு அழைப்பு வந்தது. அதில், அவரது சேமிப்புக் கணக்கு உள்ள வங்கியில் இருந்து பேசுவதாகவும், கேஒய்சி விபரங்களை பதிவு செய்ய ஓடிபி விபரத்தை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர். அதை உண்மை என நம்பிய தண்டபாணி, ஓடிபி எண்ணை தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, அவரது வங்கிக்கணக்கில் இருந்து ₹66 ஆயிரத்தை, அடுத்தடுத்து இரண்டு தவணைகளில் எடுத்துள்ளனர். இது தொடர்பான எஸ்எம்எஸ் வந்ததும் அதிர்ச்சியடைந்த தண்டபாணி, உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி 1930 என்ற எண்ணை அழைத்து புகார் தெரிவித்தார். அதன்பேரில், திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பழனி, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் விரைந்து செயல்பட்டு, ஆன்ைலன் மோசடியில் பறிபோன ₹66 ஆயிரத்தை ஒரேநாளில் மீட்டனர். அதைத்தொடர்ந்து, வாலிபர் தண்டபாணியை நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்திற்கு வரவழைத்து, அவர் பறிகொடுத்த ₹66 ஆயிரத்தை அவரிடம் ஏடிஎஸ்பி பழனி ஒப்படைத்தார்.