பவானி, ஜூலை 6: சித்தோடு அருகே வாலிபரை மிரட்டி நகை, பணம் வழிப்பறி செய்த திருப்பூரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஈரோட்டை அடுத்த வடமுகம் வெள்ளோடு, கவுண்டன்பாளையத்த சேர்ந்தவர் கமலேஷ் (23). தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ம் தேதி பைக்கில் சென்ற இவர், சிறுநீர் கழிப்பதற்காக பச்சப்பாளி மேடு, காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கமலேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2 பவுன் தங்க சங்கிலி, செல்போன் மற்றும் லேப்டாப்பை பறித்துக்கொண்டனர். மேலும், பணம் கேட்டு மிரட்டினர். இதனால், அச்சம் அடைந்த கமலேஷ், நண்பர்களிடம் ஆன்லைனில் பணம் வாங்கி ரூ.14,500 கொடுத்துள்ளார். லேப்டாப் மற்றும் செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு யாரிடமும் சொல்லக்கூடாது எனவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு அக்கும்பல் தப்பியோடியது.
இதுகுறித்து, சித்தோடு போலீசில் கமலேஷ் புகார் தெரிவித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், கன்னியாம்பூண்டி, வஞ்சிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பிரபு (39), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் கிஷோர் குமார் (29), ராஜ்குமார் மகன் பிரதீபன் (28), பல்லடம், அம்மாபாளையத்தை சேர்ந்த கோவை கனி மகன் சுரேஷ் (38), ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, வழிப்பறி செய்த தங்கச்சங்கிலி மற்றும் பணத்தை மீட்டனர்.