திருவாடானை,பிப்.18: திருவாடானை அருகே ஊமை உடையான்மடை பகுதியை சேர்ந்த செபஸ்தியான் மகன் ஜான்பால்(37). அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டை அதே கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணி மகன் ஜான்பிரிட்டோ(34) அடிக்கடி புகைப்படம் எடுத்ததாகவும், அதன் பிறகு அந்த இடங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் உரிய அரசு அலுவலகத்தில் விபரங்கள் கேட்டு மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜான்பால், கடந்த பிப்ர.15ம் தேதி இது குறித்து ஜான்பிரிட்டோவிடம் கேட்டுள்ளார். அப்போது அவரை, ஜான் பிரிட்டோவும், அவரது தம்பி ரொனால்ட் ரூபனும் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதில் படுகாயமடைந்த ஜான்பால், திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜான்பால் அளித்த புகாரின் பேரில், திருவாடானை போலீசார் ஜான்பிரிட்டோ,ரொனால்ட் ரூபன் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.