ஆரணி, நவ.29: ஆரணியில் நகை மற்றும் பணம் திருடிய வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கொசப்பாளையம் அப்பர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி, ஆசிரியர். இவரது வீட்டின் முதல் மாடியில் குணசேகரன் மனைவி புஷ்பலதா(40) என்பவர் வாடகை எடுத்து வசித்து வருகிறார். ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி காலை வழக்கம்போல் புஷ்பலதா வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர், மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ₹13.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளியான ஆரணி டவுன் கொசப்பாளையத்தை சேர்ந்த மர ஆச்சாரி தியாகராஜன்(40) என்பவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஆரணி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, அந்த வழக்கு விசாரனை நேற்று போளூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆரணி நீதித்துறை நடுவர் (பொறுப்பு) காளிமுத்துவேல் முன்னிலையில் நடந்தது. அந்த வழக்கின் தரப்புவாதத்தை அரசு வழக்கறிஞர் வாதிட்டார். பின்னர், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதித்துறை நடுவர் காளிமுத்துவேல், நகை மற்றும் பணம் திருடிய குற்றத்திற்காக தியாகராஜனுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.