செங்கல்பட்டு, அக்.19: சிறுமியை திருமணம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா (29). இவர், தனியார் கல்லூயில் ஆசிரியர் பயிற்சி படிக்க சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவே காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு 17 வயது சிறுமியை சாதிக்பாட்சா திருப்போரூர் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு 5 நாட்கள் சிறுமியிடம் உடலுறவு வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து, சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என படாளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்து 5 நாட்கள் கழித்து மீண்டு சிறுமியை அவரது வீட்டில் சாதிக்பாட்சா விட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, படாளம் போலீசார் சாதிக்பாட்சாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்க்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி குற்றவாளியான சாதிக்பாட்சாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சாதிக்பாட்சாவை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.