விழுப்புரம், ஆக. 6: திண்டிவனம் அருகே வாலிபரிடம் நூதன முறையில் ரூ.11.19 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரெட்டணை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த ஜூன் 10ம் தேதி தனது செல்போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது டிரேடிங் சம்பந்தமாக வந்த லிங்கை தொட்டதும் வாட்ஸ்அப் மூலமாக இணைப்பு கொடுக்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர் ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கில் சென்றதும் தனது விவரங்களை கொடுத்து தனக்கென யூசர் ஐடி பாஸ்வேர்ட் கிரியேட் செய்துள்ளார்.
பின்னர் அந்த நபர் முதலீடு செய்து லாபம் பெறுவது குறித்து விளக்கியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய லட்சுமணன் ரூ.11.19 லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளில் அனுப்பிய பின்பும் அவருக்கு சேர வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றியுள்ளனர். தொடர்ந்து அவரிடம் பணத்தை கேட்டபோது மேலும் ரூ.8 லட்சம் பணத்தை கட்டினால் உங்களுக்கு சேர வேண்டிய பணம் திரும்ப பெற முடியும் என்று கூறி உள்ளனர். பின்னர்தான் நூதன முறையில் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.