சாயல்குடி,ஆக.21: வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பணி நிரந்தரம், ஊதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் மாரியூர்,வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.
இதில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 1,350க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களும், 1000க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம் தொழிற்சாலை மற்றும் நிர்வாக அலுவலகம் முன்பு அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் சங்க தலைவர் பச்சமால் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். காலியாக உள்ள கள பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். 15 நாள் பணி கொடை வழங்க வேண்டும். நாள் ஒன்றிற்கு குறைந்த பட்ச கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். நிறுவனத்தில் கடந்த 40 வருடமாக ஒப்பந்தம் மற்றும் தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.