வாலாஜாபாத், மே 25: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் நேய ஊராட்சி, பாலின சமத்துவ நிர்வாகத்திற்கான களப்பணி கற்றல் பயிற்சி முகாம் நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் நேய ஊராட்சி மற்றும் பாலின சமத்துவ நிர்வாகத்திற்கான களப்பணி கற்றல் பயிற்சி முகாம் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையம் சார்பில் நடந்தது. மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 பயிற்சியாளர்கள் இந்த முகாமில் பங்கேற்று, தேவரியம்பாக்கம் ஊராட்சியின் மகளிர் முன்னேற்ற நடவடிக்கைகள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் பாலின சமத்துவ நிர்வாக நடைமுறை குறித்து நேரில் களப் பயிற்சி பெற்றனர். ஊராட்சியில் சுயஉதவிக் குழுக்களின் பங்கு பயிற்சியாளர்கள் முன்னிலையில், தேவரியம்பாக்கம் ஊராட்சியின் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், பெண்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களை விளக்கினர்.
பெண்கள் இயக்கும் குழுக்கள், தொழில் தொடக்கம் மற்றும் வங்கிக் கடன்கள், கல்வி, உடல்நலம் மற்றும் சமூக பங்கேற்பு ஆகிய துறைகளில் பெண்களின் செயல்பாடுகள், பயிற்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஊராட்சித் தலைவர் அஜய்குமாரின் ஊக்குவிக்கும் செயல்முறை, அவரின் திட்டமிட்ட முன்னேற்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கான அக்கறை, சிறந்த நிர்வாகக் கொள்கைகள், எவரும் எப்பகுதியும் விடுபடாத வகையில் வருடாந்திர கிராம வளர்ச்சி திட்டம் ஆகியவை பயிற்சியாளர்களிடையே பாராட்டைப் பெற்றன.
இதுகுறித்து பயிற்சியாளர்கள் கூறுகையில், ‘இங்கே காணப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் நம்பிக்கையை ஊட்டுகின்றன. பெண்களின் பங்கு சமூக மாற்றத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்துகொண்டோம். எங்கள் ஊர்களிலும் இதுபோன்று நடைமுறைகளை கொண்டு வருவோம் என்று உறுதி தெரிவித்தனர். களப்பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள், தேவரியம்பாக்கம் ஊராட்சியை ‘முன்னோடி மாதிரி ஊராட்சி’ என பாராட்டினர்.
இந்த நிகழ்வு, பாலின சமத்துவம் மற்றும் மகளிர் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.
மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தின் உதவி இயக்குநர் பூங்குழலி, ஒருங்கிணைப்பாளர் சேகர், பயிற்சியாளர்கள் கோகுல், அரவிந்து, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார், துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர் சாந்தி, ஊராட்சி செயலர் மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.