வாலாஜாபாத், ஆக.24: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் மாவட்ட கலெக்டர் பல்வேறு ஊராட்சிகளில் நடந்து வரும் நலத்திட்ட பணிகளை நேற்று ஆய்வு செய்தார். இதில், சிங்கடிவாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் குடியிருப்புகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ₹7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் அறை கட்டிடம் மற்றும் மருதம் ஊராட்சியில் ₹7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையல் அறை கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II கீழ், ₹15.36 லட்சம் மதிப்பீட்டில், கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து புத்தாகரம் ஊராட்சியில் ₹7.43 லட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையல் அறை, பள்ளி கழிப்பறை கட்டிடம் மற்றும் ஊராட்சி மன்ற கட்டிடத்தினை ஆய்வு செய்தார். பின்னர், தோட்டக்கலை துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிங்காடிவாக்கம் சார்ந்த விவசாயிகளுக்கு, விதை நெல், உயிர் உரம் மற்றும் நுண்ணூட்ட கலவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளை இயற்கை விவசாயத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், புத்தாகரம் ஊராட்சியில் ₹10.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உலர்கலம் மற்றும் புத்தாகரம் ஊராட்சியில் ₹45,600 மதிப்பீட்டில் பில்லேரி குளம் தூர்வாரப்பட்ட பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.