வாலாஜாபாத், ஜூலை 30: வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிக் கல்வித்துறை சார்பில், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 1108 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 63 ஆகும். 2022-2023ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் 3408 மாணவர்கள், 4794 மாணவிகள் என மொத்தம் 8202 மாணாக்கர்களுக்கு, தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 126 மாணவர்கள் மற்றும் வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 303 மாணவிகள், தென்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 83 மாணவ, மாணவிகள், வாலாஜாபாத் மாசிலாமணி மேல்நிலைப்பள்ளியில் 110 மாணவர்கள், அவளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 67 மாணவர்கள், நாயக்கன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 143 மாணவர்கள், ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 200 மாணவர்கள், அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 76 மாணவர்கள் என மொத்தம் 1108 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழுத் துணை தலைவர் சேகர், வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தர், முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) (பொ) சொர்ணலட்சுமி, வாலாஜாபாத் திமுக பேரூர் செயலாளர் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், பேரூராட்சி துணை தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.