வருசநாடு, ஜூன் 16: தேனி மாவட்டம், வருசநாடு அருகே, கோம்பைத் தொழு மலையடிவாரத்தில் மேகமலை சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு தினசரி 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து குளித்துச் செல்கின்றனர். கடந்த மே 5ம் தேதி தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் ஒரு மாதகாலமாக அருவிக்கு சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜூன் 11ம் தேதி அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக சுற்றுலாப்பயணிகள் அருவியில் குவிந்தனர். ஆர்ப்பரித்து விழும் அருவி நீரில் நீண்ட நேரம் குஷியாக குளித்து குடும்பத்தோடு பொழுதை கழித்தனர். ஆபத்தான அந்த பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்லாத வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு அந்த பகுதிகள் முட்செடிகளால் அடைக்கப்பட்டுள்ளது.