மண்டபம்,ஆக.20: மண்டபம் பேரூராட்சி பகுதியில் வாரச்சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விரைந்து வாரச்சந்தை துவங்குவதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப காய்கறி,பழங்கள் மற்றும் சமையல் பொருட்கள், வீட்டு உபயோக பொருள்கள் உள்பட அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் இலகுவாக கிடைக்கும் வகையில் வாரச்சந்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
அதன்பேரில் ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அருகே முனைக்காடு பகுதிக்கு செல்லும் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வாரச்சந்தை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மூன்று மாதங்கள் ஆகியும், அப்பகுதியில் வாரச்சந்தை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தாமதம் செய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வாரச்சந்தை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.