போச்சம்பள்ளி, ஆக. 7: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும், ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் முருகனுக்கு நேர்த்தி கடனாக சேவல் விடுவது வழக்கம். வரும் 9ம் தேதி ஆடி கிருத்திகை என்பதால், கிராமத்தில் உள்ள பக்தர்கள், தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி கையில் கங்கணம் கட்டி கொண்டு, ஒரு மாதமாக விரதம் இருந்து, வாய் அலகு குத்தியும், காவடி எடுத்தும் முருகன் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும், சேவல்களை வாங்கி சென்று கோயிலில் விட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இதனை முன்னிட்டு, நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில், நாட்டு சேவல்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன், நாட்டு சேவல் ₹300 முதல் ₹350க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று, ₹400 முதல் ₹450 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் சேவல்களை வாங்கிச் சென்றனர்.