போச்சம்பள்ளி, ஏப். 20: போச்சம்பள்ளி வாரசந்தையில், ஆய்வு செய்த கலெக்டர் அடிப்படை வசதிகள் மேம்படுத்த உத்தரவிட்டார். போச்சம்பள்ளியில், 125 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே 2வது பெரிய சந்தையாக, 18 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் கடைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுகிறது. திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இச்சந்தையில் கிடைக்கிறது. வாரந்தோறும் ஞாயிறு தோறும் கூடுவது வழக்கம். இந்த சந்தையில் கழிப்பிட வசதி இல்லாத நிலையில், குப்பை எரிக்கும் இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சந்தைக்கு வருபவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில், கலெக்டர் தீபக்ஜேக்கப் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சந்தையில் குடிநீர், கழிவறை வசதி, கால்நடைகளுக்கு குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், நடைபாதைகளுக்கு பேவர் பிளாக், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் மேற்கொள்ள கருத்துரு தயாரிக்க, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், துவக்கப்பள்ளியை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளிடம் உரையாடினார். இந்த ஆய்வின் போது, தாசில்தார் தேன்மொழி, ஆர்ஐ ஜெயபிரபா, வி.ஏ.ஓ. கௌரிசங்கர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.