புதுச்சேரி, ஜூன் 11: வாட்ஸ் ஆப்பில் வரும் போலியான வங்கி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி புதுநகர் பொறையூரை சேர்ந்த ஆண் நபரின் வாட்ஸ் ஆப்பில் யூகோ வங்கி செயலி பதிவிறக்கம் செய்து, கேஒய்சி புதுப்பிக்குமாறு வந்துள்ளது. இதனை உண்மை என நம்பி, மேற்கூறிய நபர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்கள் மற்றும் ஒடிபி பதிவு செய்துள்ளனர். பதிவுசெய்து சிறிது நேரத்தில் அவரது கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளனர்.
இதேபோல் முத்தியால்பேட்டை பெண் ஒருவரின் வாட்ஸ்-அப்பில் வந்த யூகோ வங்கி செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்கள் மற்றும் ஒடிபியை வழங்கிய சிறிதுநேரத்தில் ரூ.38 ஆயிரம் அவரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு உள்ளது. மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.48 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். தொடர்ந்து 2 பேரும் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே வங்கியின் பெயர், படத்துடன் கூடிய எந்தவொரு குறுந்தகவல்களையும், செயலியையும் பின்தொடராமல் செல்போன் பயன்பாட்டாளர்கள் தவிர்க்க வேண்டுமென சைபர் க்ரைம் காவல்துறை வலியுறுத்தி உள்ளது.
இதன்மூலமாக தாங்கள் மட்டுமல்ல, வாட்ஸ்அப் குழுவில் அங்கம் வகிக்கும் அடுத்தடுத்த நபர்களும் மோசடிக்குள்ளாகி பாதிக்கப்படுவர் என்பதால் விழிப்புடன் செயலிகளை கையாள வேண்டுமென எச்சரித்துள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பான மோசடிகளால் யாருடைய நம்பரில் இருந்து செயலி, குறுந்தகவல் பகிரப்பட்டதோடு அந்த நபர் மீதும் புகார்கள் அளிக்கப்படுவதால் அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே ஆன்லைன் செயலி குறுந்தகவல் மோசடியில் சிக்காதபடியும், அப்படியே சிக்கினாலும் உடனடியாக அதிலிருந்து வெளியேறி பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்துகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில், கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் குழுக்களில் தற்பொழுது எஸ்பிஐ, சியூபி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், எச்டிஎப்சி வங்கி, யூகோ போன்ற வங்கி பெயர்களில் தங்களின் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் செயலி லிங்க் வந்து கொண்டுள்ளது. இது சைபர் குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அந்த லிங்கை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். அப்படி லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய கைபேசி ஹேக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவார்கள்.
மேலும் உங்களின் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டு, கைபேசியில் உள்ள மற்ற நபர்களுக்கு போலியான வங்கி லிங்க் அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களில் மட்டும் 15க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளது. இதுபோன்று சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சைபர் குற்றங்கள் சம்மந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930/ 0413-2276144/ 9489205246 என்ற எண்கள் மூலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளாலம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.