அஞ்சுகிராமம், ஆக.26 : ‘வாட்ஸ் ஆப்’ சாட்டிங்கில் கவர்ச்சியான மெசேஜ் அனுப்பி பயிற்சி போதகரை ரகசிய இடத்துக்கு வரவழைத்து பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை கக்கன்புதூரை சேர்ந்த ஞான எட்வர்டு தங்க பால்மர் மகன் பவுல்ராஜ் (27). இவரது மனைவி அபிலாசா (22). இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. பவுல் ராஜ் தற்போது நாகர்கோவிலில் உள்ள இறையியல் கல்லூரி ஒன்றில் போதகர் பயிற்சி 4ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக பவுல் ராஜ் தெங்கம்புதூர் குளத்துவிளையில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த 15ம்தேதி பவுல் ராஜின் வாட்ஸ் ஆப்பிற்கு ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தி ஒன்று வந்து உள்ளது. இதைக்கண்டதும் தனது நண்பர்கள் என்று நினைத்த பவுல்ராஜ், மெசேஜுக்கு பதில் அனுப்பியுள்ளார். இப்படியே பலமுறை சேட்டிங் நடந்துள்ளது. ஆனாலும் எதிர்முனையில் மெசேஜ் அனுப்பிய நபர் யார்? என்பதை சொல்லவே இல்லை. இந்தநிலையில் உங்களை நான் நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன் என கவர்ச்சி தரும் வகையிலும் மெசேஜ் வந்து உள்ளது. இதை கண்ட பவுல் ராஜ், தனது நண்பர்கள் தான் இப்படி விளையாடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு சரி வருகிறேன்… எங்கே வரவேண்டும் என்று மெசேஜ் அனுப்பினார்.
இதையடுத்து அந்த நபர் மயிலாடி புதூரில் ஒரு இடத்தை கூறி அந்த பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று பவுல்ராஜ், அந்த நபர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்தார். அந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் பவுல்ராஜ் பயத்துடனே நின்றுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு தடதடவென அங்கு அரிவாளுடன் வந்த 4 வாலிபர்கள் பவுல் ராஜை சுற்றி வளைத்தனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல் பவுல் ராஜிடம் இருந்த செல்போனை வலுக்கட்டாயமாக பறித்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்து 800 பணத்தையும் பறித்த நிலையில், இங்கு நடந்ததை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பவுல்ராஜ் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், பயிற்சி போதகரிடம் பணம் பறித்தது மயிலாடி புதூரை சேர்ந்த ரஞ்சித் குமார் (20), அஜய் (20), பெருமாள் சுனில் (19), பிரதீஷ் (21) என்பது தெரியவந்தது. அவர்களில் ரஞ்சித் குமார் மற்றும் அஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெருமாள் சுனில் மற்றும் பிரதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். பயிற்சி போதகரை ரகசிய இடத்துக்கு வரவழைத்து பணம், செல்போனை பறித்த கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.