உளுந்தூர்பேட்டை, ஆக. 19: உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் இளம்பெண்களின் படங்களை வாட்ஸ்-அப் மூலம் இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அனுப்பி பெண் தலைமையிலான கும்பல் விபசாரத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்களை அடுத்து நேற்று உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சின்னசாமி நகர் அருகில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று வீட்டிலிருந்த கல்பனா (44) என்ற பெண்ணையும் மேலும் அந்த வீட்டில் இருந்த ராஜேஸ்வரி உள்ளிட்ட மூன்று சிறுமிகள், மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.
விசாரணையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் படத்தை உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் விரும்பும் பெண்ணிற்கான தொகையை செல்போன் ஜி-பே மூலம் பெற்றுக் கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளை விபசாரத்துக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது. இந்த விபச்சார கும்பலோடு வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொடர்பு வைத்துள்ளார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.