திருவள்ளூர்: ஜமீன் பல்லாவரம், ரேடியல் சாலையில் பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, வசித்து வரும் 27 வயதுடைய பெண் மருத்துவர், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது, செல்போனுக்கு கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் மூலம், ஆபாச படம், குறுஞ்செய்திகள் தொடர்ச்சியாக வந்துள்ளன.
இதுகுறித்து, அந்த பெண் மருத்துவர், தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவரது கணவர், குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது, அவரை அந்த நபர் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவர்கள் நேற்று முன்தினம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, கண்ணுதோப்பு தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (27) என்பவர், பெண் மருத்துவருடன் ஒன்றாக படித்து வந்ததும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருவதும், பெண் மருத்துவரின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பாலியல் தொல்லை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.