ஈரோடு, ஜூலை 2: ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள், பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவைகளை நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஈரோட்டில் சத்தி ரோடு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி ரோடு, ஈ.வி.என் ரோடு ஆகிய பகுதிகள் அதிக பொதுமக்கள் நடமாட்டம் கொண்டது. இச்சாலையை ஒட்டி, பெரிய வணிக நிறுவனங்கள் உட்பட நுாற்றுக்கணக்கான கடைகள் உள்ளன.
பொங்கல், தீபாவளி, புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருக்கும். இச்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர கடைகளை வரைமுறைப்படுத்தியது.
இருப்பினும், சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், வழக்கத்தை காட்டிலும் நெரிசல் பன்மடங்கு அதிகரித்து, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.