வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் பள்ளி மேலாண்மை குழுவினருக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழுவினை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது, அதன்படி மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் வாடிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்வேல் குமரன், உமா ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் பெரியகருப்பன், கருணாகரன் உள்ளிட்டோர் 2009 குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் கூறியுள்ளபடி அனைத்து பள்ளிகளிலும் அமைக்கப்பட்டுள்ள மேலாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இம்முகாமில் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணை தலைவர் கார்த்திக், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் லதா கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், மதுரை மாநகராட்சி சமுதாய அமைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.