சேலம், ஜூன் 11: சேலத்தில் கட்டிடத்தை வாடகைக்கு பேசி ₹25 லட்சம் முன்பணம் வாங்கிக்கொண்டு, வேறு ஒருவருக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜங்சன் மெயின் ரோட்டில் கட்டிடம் ஒன்று இருந்தது. இதனை சங்ககிரி பக்கமுள்ள கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த செந்தில் முருகன்(57). என்பவர் வாடகைக்கு கேட்டுள்ளார்.
இதையடுத்து மாதம் ₹50ஆயிரம் வாடகை என பேசி, முன்தொகையாக ₹25 லட்சம் கொடுத்தார். இதையடுத்து ஒப்பந்தம் போட்ட நிலையில், வாடகை கட்டிடத்தை அந்தோணி மைக்கேல் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக விசாரித்தபோது, இவரிடம் வாடகை பேசி பணத்தை பெற்றுக்கொண்ட அந்தோணி மைக்கேல், வேறு ஒருவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்முருகன், பணத்தை திரும்பகேட்டபோது கொடுக்க மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் செந்தில்முருகன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.