திருப்பூர், ஆக. 23: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு தெரியாமல் விதிக்கப்படும் அபராதத்தை தடை செய்ய வேண்டும் என, திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன ஆலோசகர்கள் சங்க பொதுக்குழு உள்ளிட்ட முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன ஆலோசகர்கள் பொதுக்குழு கூட்டம், தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் மாநில சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம், கொடி அறிமுக கூட்டம் ஆகிய முப்பெரும் விழா நேற்று காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
இதற்கு தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நல சங்க மாநில தலைவர் அறிவழகன், மாநில செயலாளர் ஜமால் முகம்மது, பொருளாளர் சேகர், மாநில முதன்மை துணைத்தலைவர் அழகு, துணைச்செயலாளர் தமிழரசன், துணை ஒருங்கிணைப்பாளர் டேவிட், இணைச்செயலாளர் ஷாஜகான் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணைத்தலைவர் உதயகுமார், துணை செயலாளர் செந்தில்குமார், மாநில பிரதிநிதி ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை தலைவர் தனபால், செயலாளர் முருகானந்தம், கவுரவ தலைவர் வித்யாசாகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஆலோசகர் வாங்கி கொடுக்கும் வாகன ஓட்டிகளுக்கு கட்டாய ஹெல்மெட் மற்றும் இன்சூரன்ஸ் செய்துகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாநில அரசும், மத்திய அரசும் விதிக்கும் ஆன்லைன் அபராத தொகைகளை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு தெரியாமல் விதிக்கப்படுவதை தடை செய்ய வேண்டும். டி.டி. வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையை அதே இடத்திலேயோ அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவோ அபராத தொகையை கட்டிய உடன் வாகனத்தை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.