திருவாடானை, அக்.4: திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்திற்கு செல்லும் தார்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே கடம்பாகுடி உள்ளது. இங்கு தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தார் சாலை இவ்வூருக்கு செல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த தார் சாலை சேதமடைந்த நிலையிலும் புதிதாக தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலையின் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது.
இச்சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால் விபத்து ஏற்படுவது, வாகனமும் அடிக்கடி பஞ்சராகி விடுவதாக புலம்பி வருகின்றனர். இந்த மோசமான நிலையில் உள்ள சாலையால் தனியார் பள்ளி வாகனங்களும் இந்த ஊருக்கு செல்வதை தவிர்த்து வருகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி வேலைக்காக வெளியூர் செல்வோரும் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.